×

சேரம்பாடி-வயநாடு சாலையில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி மறியல்

 

பந்தலூர்: பந்தலூர் அருகே பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி சேரம்பாடி-வயநாடு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதியை சேர்ந்தவர் சுனிதா (42), கூலி தொழிலாளி. இவரது மகள் அஸ்வதி (20), கூடலூரில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை மகளை கல்லூரிக்கு அனுப்ப பஸ்சில் ஏற்றி விடுவதற்கு சுனிதா வீட்டில் இருந்து வனப்பகுதி வழியாக மகளுடன் வந்துள்ளார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை இருவரையும் தாக்கியது.

இதில் படுகாயமடைந்த சுனிதாவை அப்பகுதியினர் மீட்டு கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயமடைந்த மகள் அஸ்வதியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சுனிதா உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று இரவு சுனிதா உடலை கோரஞ்சலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். இன்று அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் இன்று காலை யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சேரம்பாடியில் இருந்து வயநாடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை கோரஞ்சலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இத்தகவல் அறிந்த தேவாலா டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையிலான போலீசார், வனத்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post சேரம்பாடி-வயநாடு சாலையில் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Serambadi-Wayanadu road ,Bandalur ,Cherambadi-Wayanadu ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...